செல்போன் மூலம் பாதிக்கப்படும் இளைஞர்களை அரசாங்கத்தால் தான் காப்பாற்ற முடியும் – இயக்குநர் பேரரசு

புளுவேல் விளையாட்டு நிச்சயமாக இது பற்றி கேள்விபடாதவர்கள் இருக்க முடியாது. சமீபத்தில் இந்த புளூவேல் என்ற விளையாட்டு காரணமாக உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் தற்கொலை செய்து கொண்டது உலகத்தையே உலுக்கியது. இன்றைக்கு இருக்கின்ற பொருளாதார சூழலில் கணவன் மனைவி இரண்டு பேருமே வேலைக்கு போக வேண்டிய நிர்பந்தம். படித்தால் தான் வாழமுடியும் ஏன் உயிரோடுவே இருக்கமுடியும் என்ற மனநிலைக்கு எல்லாரும் மாறிவிட்ட
நிலையில், பிள்ளைகளுக்கோ பள்ளிகளில் ஏற்படும் நெருக்கடி. பெற்றோர் அரவணைப்பில் இருக்க வேண்டிய வயதில் பிள்ளைகள் தனிமையில் தள்ளப்படுகிறார்கள். அவர்களின் தனிமையைத் தங்களுக்குச் சாதகமாக்கிதான் புளுவேல், மோமோ, பப்ஜி போன்ற ஆன் லைன் கேம்கள் இளைஞர்களை கொன்று குவிக்கிறது. அவர்களை மீட்கவும் பிள்ளைகள் தான் செல்வம் அவர்களை பாதுகாத்திடுங்கள் என்று பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதே புளுவேலின் படத்தின் நோக்கம்.

மேலும், இந்த புளூவேல் விளையாட்டின் மூலம் நேரடியாக பலரும் பாதிக்கட்டிருக்கிறார்கள். அதிலும் தன் உயிரையே இழந்த மதுரையைச் சேர்ந்த இளைஞன் விக்னேஷ் தயார் டெய்சிராணி மற்றும் அவரது சகோதரரும் வந்திருந்து தங்கள் மகனைப் போல் யாரும் பாதிக்கப்படக் கூடாது என்று கூறினார்கள்.

புளூவேல் படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் அப்படத்தில் நடித்த நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பேசியதாவது

தயாரிப்பாளர் மது பேசும்போது

புளூவேல் எனக்கு முதல் படம். முதல் படமே தரமான படமாக வந்ததில் பெருமையடைகிறேன். டெக்ஸ்டைல்ஸ் துறையில் இருந்தாலும், சினிமா என்பது எனக்கு விருப்பமாக துறை. இது போல் தரமான படங்களைத் தயாரிக்க வேண்டும் என்றார்.

டெய்சிராணி பேசும்போது,

என் மகனைப் போல் பாதிக்கப்படும் பலரின் வாழ்க்கையை மீட்பதற்காக விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இப்படத்தை எடுத்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் என்றார்.

ஆர்.வி.உதயகுமார் பேசும்போது,

இப்படத்தின் ட்ரைலர் பார்க்கும்போது ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல், இப்படம் எப்படி இருக்கும் என்பது புரிகிறது. ஒளிப்பதிவாளரின் பணி சிறப்பாகவும் சக்திவாய்ந்ததாகவும் இருக்கிறது. படத்தொகுப்பாளர் தன் பணியை சிறப்பாக செய்திருக்கிறார். பின்னணி இசை ஒவ்வொரு காட்சியையும் திக் திக்கென்று மிகப்பெரிய சஸ்பென்ஸை உருவாக்கியிருக்கிறது. நடிகை பூர்ணா உடலளவில் ஆணாகவும், உள்ளத்தில் பெண்ணாகவும் இருக்கிறார்.

இந்த புளூவேல் விளையாட்டு என்பது எந்தளவுக்கு கொடூரமான, ஆபத்தான விளையாட்டு என்பதை ஒரு வருடத்திற்கு முன்பே அறிந்து கொண்டோம். மதுரையில் ஒரு சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம் அனைவரையும் உலுக்கியது.

தமிழ் சினிமாவில் 90 சதவிகித படங்கள் தோல்வியடைகின்றன. அதற்கு காரணம் கதையில்லை, திறமையான இயக்குநர்களுக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை என்பது தான் தோல்விக்கு காரணம். இந்த பிரச்னையைத் தீர்ப்பதற்கு அரசாங்கம் முன் வந்துள்ளது நன்றி கூறத்தக்கது. ஆன்லைனில் மட்டும் தான் சினிமா டிக்கெட் விற்கப்படும் என்ற திட்டத்தால் அரசாங்கத்திற்கு தான் வருவாய் அதிகம். தயாரிப்பாளருக்கோ 25 சதவீதம் தான் வருமானம். அதை வைத்துக் கொண்டு இது மாதிரி தரமான படங்களை எப்படி தயாரிக்க முடியும். ஆகவே, இத்திட்டத்தை மறுபரீசிலனை செய்ய வேண்டும். தயாரிப்பாளர்கள் ஒன்றுகூடினால் தான் இத்திட்டத்தை மாற்றியமைக்க வேண்டும் என்றார்.

கவிஞர் ரவிபாரதி பேசும்போது

திரைப்படம் என்பது பொழுதுபோக்காக மட்டுமல்லாமல் சமுதாயத்திற்கு நல்ல கருத்தை கொண்டு சேர்க்க வேண்டும் என்ற நோக்கத்தோடும் இருக்க வேண்டும். அதன் அடிப்படையில் புளூவேல் விளையாட்டைப் பற்றி இப்படத்தில் கூறியிருக்கிறார்கள். எத்தனையோ சிறுவர்களும், இளைஞர்களும் இதுபோன்ற விளையாட்டுகளுக்கு அடிமையாகி தங்கள் வாழ்வைத் தொலைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் வகையில் இப்படத்தை தயாரித்திருக்கும் தயாரிப்பாளர்களுக்கு நன்றி என்றார்.

தயாரிப்பாளர் டி.சிவா பேசும்போது

சிறிய திரைப்படங்கள் பார்வையாளர்களைக் கவர்வது கடினமான விஷயம். முன்பெல்லாம் தொலைக்காட்சியில் ஒரு படம் ஒளிப்பரப்புவதற்கு ஒரு வருடம் காலம் ஆகவேண்டும் என்று இருந்தததை அமேசான் வந்தபிறகு 30 நாட்கள் ஆனால் போதும் என்ற நிலை வந்தவுடன் திரையரங்கிற்கு வரும் பார்வையாளர்களின் வருகை குறைந்து விட்டது. இந்த படம் மூலமாக அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என்று வாழ்த்துகிறேன் என்றார்.

தயாரிப்பாள் கே.ராஜன் பேசும்போது,

இப்படத்தின் ட்ரைலர் பார்க்கும்போது பாதிப்படைந்தேன். அந்த சிறுவனுக்கு என்னாகுமோ என்ற பதற வைக்கிறது. செல்போன் என்கிற விஞ்ஞான கண்டுபிடிப்பு பல நன்மைகளை வழங்கினாலும், அதே அளவு ஆபத்தானதாகவும் இருக்கிறது. மேலும், 16 வயதிலேயே மது பழக்கத்திற்கு ஆளாகியிருக்கிறார்கள். அதில் 40 சதவீதம் பேர் அழிந்து கொண்டிருக்கிறார்கள். அதனால் குடும்பங்கள் பாதிப்படைந்து வருகிறது. அதேபோல் செல்போன் என்பது பெற்றோரையும் பிள்ளைகளையும் பிரிக்கும் கருவியாக மாறியுள்ளது. பெற்றோருக்கும் தெரியாமல் தனியாக சென்று பேசுவது அதிகரித்திருக்கிறது. செக்ஸ் வீடியோக்கள் வெளிப்படையாக வியாபாரம் செய்யப்படுகிறது என்று நீதிபதி புகழேந்தி கூறினார்.

மேலும், யூடியூப் பற்றி சென்சார் போர்டை கேட்கிறேன், அதில் வன்முறை காட்சிகள் அதிகமாக இருக்கிறது. வன்முறை காட்சிகள் வெட்டப்படமால் ஒளிப்பரப்பாகிறது.

20 வருடங்களுக்கு முன்பு தொலைக்காட்சியில் சக்திமான் என்ற தொடரால் எத்தனை குழந்தைகள் பாதிக்கப்பட்டார்கள். அந்த தொடரைத் தடை செய்யக் கோரி மக்கள் விழிப்புணர்வு இயக்கம் நடத்தி வருகிறேன். அதன்மூலம் போராட்டம் நடத்தி நிறுத்த வைத்தேன்.

ஒரு படத்தையும், தயாரப்பாளரையும், நடிகர்களையும் வாழ வைப்பதும் இயக்குநர்கள் தான், கெடுப்பதும் இயக்குநர்கள் தான். ஒரு இயக்குநர் நினைத்தால் சாதாரண மனிதரையும் சூப்பர் ஸ்டாராக்க முடியும், சூப்பர் ஸ்டாரையும் சாதாரண மனிதராக்க முடியும். அதேபோல், சிலர் உங்கள் படம் நன்றாக ஓடுகிறது, நீங்கள் வரும் காட்சியில் ரசிகர்கள் ஆரவாரம் செய்கிறார்கள் என்று உசுப்பேத்திவிடுகிறார்கள். அதை நம்பி நாயகிகளும் சம்பளத்தை உயர்த்துகிறார்கள்.

தற்போது வந்திருக்கும் ஆன்லைன் டிக்கெட் விற்பனை திட்டத்தால் தயாரிப்பாளர்களுக்கு வெளிப்படையான கணக்குத் தெரியும். அதன்மூலம் அனைத்துத் தயாரிப்பாளர்களும் பயனடைவார்கள் என்றார்.

வியாபார நோக்கத்தோடு தரமற்ற படங்கள் வெளியாகும் சூழலில் புளூவேல் விளையாட்டைப் பற்றியும், அதை விளையாடுபவர்களுக்கு ஏற்படும் ஆபத்தைப் பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக சமூக அக்கறையோடு இப்படத்தைத் தயாரித்திருக்கும் தயாரிப்பாளர்களுக்கு பாராட்டுக்கள். இப்படம் மூலம் இதுபோன்ற ஆபத்தை விளைவிக்கும் விளையாட்டுக்களை அடியோடு ஒழிக்க வேண்டும் என்றார்.

சதீஷ் சிவலிங்கம் பேசும்போது

திரைப்படம் என்பது உலகெங்கிலும் உள்ள மக்களை ஈர்க்கும் ஊடகம். எந்த விஷயமாக இருந்தாலும் சினிமா மூலம் கூறினால் அது எளிதாக அனைவரையும் சென்றடையும். அதனடிப்படையில் ஒரு நல்ல கருத்தைக் கூறும் படமாக இப்படத்தை எடுத்திருக்கிறார்கள். இப்படத்தை பார்க்கும் போது சில காட்சிகள் ஆச்சரியங்களையும், அச்சத்தையும் ஏற்படுத்தும் விதமாக இருக்கிறது. இவர்களின் முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள் என்றார்.

ஒளிப்பதிவாளர் கிருஷ்ணகுமார் பேசும்போது,

நடிகர் ஸ்ரீகாந்த் பேசும்போது,

ஆந்திராவிலும், கேரளாவிலும் சினிமாத்துறை நன்றாக இருக்கிறது தமிழ்நாட்டில் சரியில்லை என்று எல்லோரும் சினிமாவை குறை கூறுகிறார்கள். நடிகர் சங்கத்தில் ஒற்றுமையில்லை, தயாரிப்பாளர் சங்கத்தில் ஒற்றுமையில்லை.முதலில் நம் வீட்டில் ஒற்றுமை இருக்க வேண்டும். எப்போது நமக்குள் ஒற்றுமை இல்லையோ, அடுத்தவர்கள் வேடிக்கைப் பார்க்கத்தான் செய்வார்கள். அடுத்தவர்களைக் குறை கூறுவதில் எந்த பிரயோஜனமும் இல்லை.

கதாநாயகனை நம்பி படம் எடுக்காதீர்கள், கதையை நம்பி படமெடுங்கள். அதேபோல், நல்ல இயக்குநர்களுக்கு தயாரிப்பாளர்கள் கிடைப்பதில்லை. அப்படி கிடைத்தால் அது அதிர்ஷ்டமாக கருதி அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதைவிடுத்து மற்றவர்களைக் குறை கூறக்கூடாது.

முதலில் தயாரிப்பாளர் சங்கத்தை சரிசெய்ய வேண்டும். ஒரு சங்கத்தில் பதவியில் இருப்பவர்கள் சுயநலமில்லாதவர்களாக இருக்க வேண்டும். பதவிக்கு வருகிறவர்கள் சுயநலத்தோடு இருந்தால் சங்கத்தை எவ்வாறு சரிசெய்ய முடியும். ஆந்திராவில் சினிமா தான் பொழுதுபோக்கே ஆகையால் சினிமாவைக் கொண்டாடுகிறார்கள். ஆனால், தமிழ்நாட்டில் பொழுதுபோக்கிற்கு பல விஷயங்கள் இருக்கின்றன. சினிமாவை சரிசெய்தால் தான் மக்கள் ஆர்வத்தோடு வருவார்கள். மக்களை கட்டாயப்படுத்த முடியாது. பிடித்திருந்தால் அவர்களே வந்து பார்ப்பார்கள். ஏகப்பட்ட படங்கள் வெளியாகிறது, திரையரங்க உரிமையாளர்கள் என்ன செய்வார்கள்? ஒரு படத்தைத் தூக்கிவிட்டு இன்னொரு படத்தை போடத்தான் செய்வார்கள். அதற்கு அவர்களைக் குறைகூறுவது சரியல்ல. நம்முடைய துரதிர்ஷ்டம்.

மேலும், நாங்கள் சிறுவயதாக இருக்கும்பொழுது தெருவில் சென்று விளையாடுவோம். இப்பொழுது டிஜிட்டல் வந்தபிறகு குழந்தைகள் தெருவில் விளையாட வேண்டும் என்ற முயற்சி கூட செய்றதில்லை. வெயிலில் கருத்து விடுவார்கள், அடிபட்டுவிடும் என்று நினைக்காமல் அதை பெற்றோர்கள் கவனித்து சரிசெய்ய வேண்டும். குழந்தைகளின் நலனுக்காக அவர்கள் எதில் ஆர்வம் செலுத்துகிறார்கள் என்று பெற்றோர்கள் கவனம் செலுத்த வேண்டும். எங்கள் வீட்டில் குழந்தைகள் இந்த அளவு தான் டிஜிட்டல் உபயோகிக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு வைத்திருக்கிறோம். அதேபோல் எல்லோரும் பின்பற்ற வேண்டும்.

சமூக நலனிற்காக ஒரு தயாரிப்பாளர் இதுபோன்ற கருத்துக்களைக் கொண்டு இப்படம் எடுத்ததற்கு படக்குழுவினர்களுக்கு வாழ்த்துக்கள். அருமை சந்திரன் மிகவும் நல்ல மனிதர், சிங்கப்பூரில் இருந்து வந்து ஒரு நல்ல படம் தயாரித்து வெற்றியடைய வேண்டும் என்ற ஆர்வத்தோடு இப்படத்தைத் தயாரித்திருக்கிறார். அவர் வெற்றியடைந்தால் இன்னும் 10 பேர் இதுபோன்ற படங்கள் தயாரிப்பதற்கு காத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் எல்லோரும் வெற்றியடைய வேண்டும். மொத்த படக்குழுவினர்களுக்கும் பாராட்டுக்கள் என்றார்.

கவிஞர் இறைமதியழகன் பேசும்போது,

இந்தியாவில் அனைவரின் பாதுகாப்பிற்காக இராணுவம், மருத்துவர்கள், தாதியர்கள் என்று பலர் இருந்தும், பல கோடி ரூபாய் செலவு செய்தும், புளூவேல் விளையாட்டு மூலம் நம் வீட்டுக் குழந்தைகள் தங்கள் கைகளாலேயே பிளேடை வைத்து தங்களையேக் கிழித்துக் கொள்ளும் கொடூரத்தைப் பார்க்கும்போது நெஞ்சு பதறுகிறது. இப்படம் மூலம் அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக அமைந்திருக்கிறது என்றார்.

பிர்லா போஸ் பேசும்போது,

இந்தத் திரைப்படத்தில் துணைக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். 15 வருடங்கள் சினிமாத் துறையில் இருந்தாலும் இப்படம் தான் எனக்கு மிகவும் முக்கியமான படமாக இருக்கும் என்றார்.

கவிஞர் அண்ணாதுரை பேசும்போது,

மக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இப்படத்தைத் தயாரித்திருக்கிறார்கள். இதுபோன்று மேலும் பல படங்கள் தயாரிக்க வேண்டும். புளூவேல் விளையாட்டு இன்று இல்லையென்றாலும், இதுபோன்ற ஆபத்தான பல விஷயங்களைப் பெற்றோர்கள் கவனித்து தங்கள் குழந்தைகளை அதிலிருந்து மீட்க வேண்டும் என்றார்.

தாமிரா பேசும்போது,

தற்போது இருக்கும் சூழலில் சாப்பாடு ஊட்டும்போது வீடியோ பார்த்துதான் சாப்பிட பழகி வைத்திருக்கிறோம். அது வளர்ந்த பிறகு வீடியோ கேம் விளையாடுகிறது. இப்பொழுது ஒரு குழுவாக சேர்ந்து விளையாடலாம் என்று ஒரு விளையாட்டும் வந்திருக்கிறது. அதிலிருந்து அனைவரையும் மீட்க வேண்டும் என்றார்.

ஜாக்குவார் தங்கம் பேசும்போது,

பிரகாஷ் ராஜ் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்துவிட்டு நடிக்க நேரமில்லை என்று கூறிவிட்டார். 15 லட்சம் முன்பணத்தில் 5லட்சன் தொகையை மட்டும் கொடுத்துவிட்டு மீதி பணத்தைத் திருப்பிதர மறுக்கிறார். அவர் எந்த படப்பிடிப்பில் இருந்தாலும் மறியல் நடத்துவோம். மதுரையில் ஒரு சிறுவனுக்கு நடந்த கொடூரத்தைக் கண்டு அந்த தாய்க்கு எந்தளவு துக்கம் இருந்திருக்கும். அது வேறு யாருக்கும் நடந்துவிட கூடாதென்று இப்படத்தை எடுத்திருக்கிறார்கள்.

அரசாங்கத்திடம் கூறி குறைந்த கட்டணத்தில் டிக்கெட் விற்பனை செய்ய கோரிக்கை விடுக்க வேண்டும். அப்போதுதான் அனைவரும் சென்று பார்ப்பார்கள்.

நடிகை பூர்ணா விஜயசாந்தி மாதிரி ஆக்ஷன் நாயகியாக வருவார். நடிகை விஜயசாந்திக்கு அதிக படங்கள் நான் தான் சண்டைபயிற்சி செய்திருக்கிறேன்.

அரசாங்கத்திற்கு அடுத்து மக்களை காப்பாற்றும் தூண் பத்திரிகையாளர்கள் தான் , என்றார்.

கவிஞர் சினேகன் பேசும்போது,

எந்த விஞ்ஞானம் நம் பிள்ளைகளின் வாழ்வை கேள்விக்குறியாக்குகிறதோ அதே விஞ்ஞனாம் நம் நாட்டை உயர்த்தியிருக்கிறது என்பதை இஸ்ரோ விஞ்ஞானிகள் நிரூபித்திருக்கிறார்கள். பெற்றவர்கள் தங்கள் குழந்தைகள் தவறான வழியில் சென்றால் சமூகத்தின் மீது பழி கூறுகிறார்களே தவிர, தங்களிடம் இருக்கும் தவறை உணர்ந்து சரிசெய்ய முயல்வதில்லை. இந்நிலை மாற வேண்டும்.

மக்களுக்கான அரசாங்கம் என்று அமைகிறதோ அன்று தான் நம் நாட்டிற்கு நன்மை கிடைக்கும்.

ஆன்லைனில் டிக்கெட் பதிவில் 25 சதவீதம் யாருக்குச் செல்கிறது என்பதை வெளியிட்டால் நன்றாக இருக்கும்.

மாஸ்டர் கபிஷ் கன்னா பேசும்போது,

இது எனக்கு முதல் படம். இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். இப்படத்தில் வாய்ப்புக் கொடுத்த எனது தந்தைக்கும், இயக்குநருக்கும், தயாரிப்பாளர்களுக்கு நன்றி என்றார்.

இக்கதை எனக்கு கூறும்போது மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் பூர்ணா மேடத்தை படிப்பிடிப்பில் பார்த்து தான் பயமாக இருந்தது என்றார்.

நடிகை பூர்ணா பேசும்போது,

எனக்கு புளூவேல் பற்றித் தெரியாது. எனது சகோதரி உதவி புரிந்தார். முதல் நாள் படப்பிடிப்பில் நான் சிறிது மனசோர்வடைந்தேன். பெரிய நடிகர்கள் இல்லை. புகைப்படக்காரர்கள் அதிகமில்லை. ஆகையால், இரண்டாவது நாள் படப்பிடிப்பிற்குச் செல்ல தயங்கினேன். குறைவான படங்கள் நடித்திருப்பதால் தேர்வு செய்வதில் தவறு செய்துவிட்டேனோ என்ற சந்தேகம் இருந்தது. ஆனால், ஒரு உண்மையான சம்பவத்தை மையமாக வைத்து மிகச் சிறிய பட்ஜெட்டில் தரமான படமாக எடுத்திருக்கிறார்கள். இதுமாதிரி உண்மை சம்பவத்தை கூறியிருக்கும் படத்தில் நடித்ததில் மகிழ்ச்சியடைகிறேன்.

குழந்தைகளுக்கு பெரியவர்கள் தான் எல்லா விஷங்களையும் பழக்குகிறார்கள். அவர்கள் ஆசைப்படுவதை நன்மை தீமை பற்றி யோசிக்காமல் செய்யும் பொறுப்பற்ற பெரியவர்களால் தான் குழந்தைகள் தவறாகப் பாதைக்குச் செல்கிறார்கள்.

இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த கபிஷ், நன்றாக நடித்திருக்கிறான். 11-வது மாடியில் நின்று நடிக்கும்போது எனக்கே பயமாக இருந்தது. ஆனால், அவன் தைரியமாக நடித்திருந்தான். அவனுடைய அப்பாவித்தனம் தான் படட்திற்க்கு மிக பெரிய பலம் என்றார்.

மனநல மருத்துவர் ஃபஜிலா ஆசாத் பேசும்போது,

சமூக நலன் கருதி பல படங்கள் எடுக்கப்பட்டிருந்தாலும் இப்படம் தான் சிறந்த படமாக கருதுகிறேன். பெற்றோர்கள் குழந்தைகளை நன்றாக கவனித்துக் கொள்கிறோம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் எந்த விஷயங்களில் கவனத்தை வைக்க வேண்டும் என்பதில் தான் குழப்பமடைகிறார்கள். எல்லா விளையாட்டுக்களும் தவறானது இல்லை. ஆனால், சவுண்ட் சிஸ்டம் தான் நரம்பைப் பாதித்து அடிமையாக்குகிறது. இந்த விளையாட்டின் பாதிப்புக்கு முக்கிய காரணம் சவுண்ட் சிஸ்டம் தான். ஒரு குறிப்பிட்ட இசையைக் கேட்க கேட்க அது மூளை நரம்பைப் பாதித்து அந்த இசையை மீண்டும் கேட்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டுகிறது. அதன்காரணமாக புளூவேல் மாதிரி ஆபத்தான விளையாட்டை மீண்டும் மீண்டும் விளையாடுகிறார்கள். அதுமட்டுமில்லாமல், உணவு முறைகளும் இதற்கு துணைபுரிகிறது.

வீடியோ கேம் மூலம் அடிமையாகி பாதிக்கப்பட்டு என்னிடம் வரும் குழந்தைகளையும், இளைஞர்களை நான் மீட்டு வருகிறேன். மூளை நரம்புகளுக்கு புத்துணர்ச்சித் தரும் நேர்மறையான எண்ணங்களைத் தரும் இசைகளைக் கேட்க வைப்பதன் மூலம் அவர்களை அந்த பாதிப்பிலிருந்து நிச்சயம் வெளியே கொண்டு வரமுடியும்.

இப்படத்தைப் பார்க்கும்போது 13 சிறுவனால் திறமையாக நடிக்கும்போது, இந்த விளையாட்டு மூலம் அதே திறமையால் அவன் வாழ்க்கையையேக் கேள்வி குறியாக்கியிருக்கிறார்கள் இந்த விளையாட்டை உருவாக்கியவர்கள். அக்குழந்தைகளை சரியான முறையில் கவனித்து சரிசெய்து மீட்பது பெற்றோர்களின் தலையாய கடமை என்றார்.

இயக்குநர் ரங்கநாதன் பேசும்போது,

இப்படம் சிறந்த படமாக வந்ததற்கு காரணம் படக்குழுவினர்களின் ஒத்துழைப்பு தான் என்றார்.

இயக்குநர் பேரரசு பேசும்போது,

இன்று தரமான படங்கள் வருவதில்லை என்பதற்கு காரணம் இயக்குவதற்கு தெரியாத நபரை நம்பி பல கோடி செலவழிக்கும் தயாரிப்பாளர்களால் தான். துணி தைக்க தெரியாதவரிடம் நாம் துணி தைக்கக் கொடுப்பதில்லை. ஆனால், படமியக்கத் தெரியாதவர்களிடம் வாய்ப்பு செல்கிறது. ஆகையால், தான் பல படங்கள் தோல்வியடைகின்றது.

இந்த படத்தின் ட்ரைலரைப் பார்க்கும்போது டி.ரங்கநாதன் அனுபவமுள்ள விஷயமறிந்த இயக்குநர் என்பது தெரிகிறது.

செல்போன் உபயோகிக்காதவர்கள் இன்று கிடையாது என்றே சொல்லலாம். இளைஞர்கள் முதல் பூ விற்பனை செய்பவர்கள் கூட செல்போன் உபயோகிக்கிறார்கள். கணவன் கதவைத் திறப்பதற்கு கூட காலிங் பெல்லை அழுத்துவதில்லை. செல்போனில் தான் கதவைத் திறக்க சொல்கிறார். அதற்கு காரணம் குறைந்த கட்டணம் செலுத்தி ஒரு மாதம் முழுக்க எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேசிக்கொள்ளலாம் என்ற திட்டத்தால் தான். அரசாங்கத்தால் தான் இந்நிலையை மாற்ற முடியும். முன்பு இருந்தது போல் கட்டண சேவையை அமல்படுத்த வேண்டும். ஒரு நிமிடத்திற்கு ரூ.10 என்று நிர்ணயித்தால் கூட தவறில்லை. அப்போது தான் கட்டுப்பாடு வரும். ஃபுல் டாக் டைம் என்ற அரக்கனை ஒழிக்க வேண்டும்.

சில படங்கள் பொறுப்பில்லாமல் எடுப்பார்கள், சில படங்கள் பொறுப்புடன் எடுப்பார்கள், ஆனால் சில படங்கள் தான் விழிப்புணர்வுக்காக எடுப்பார்கள். புளூவேல் அதில் ஒரு படம். கணேஷின் பின்னணி இசை மிரட்டியிருக்கிறது. ஒளிப்பதிவு அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதற்கு காரணம் அனைவரும் தொழில் தெரிந்தவர்கள் என்பது தான்.

போலீஸ் உடை எல்லோருக்கும் பொருந்தி விடாது. பூர்ணாவுக்கு பொருந்தியிருக்கிறது. அவரை வைத்து நான் படமெடுப்பேன் என்றார்.

தயாரிப்பாளர் அருமை சந்திரன் பேசும்போது,

நல்ல படமாகவே இருந்தாலும் அதிக திரையரங்கம் கிடைக்காத காரணத்தால் ஒரு வாரத்திற்கு மேல் திரையரங்கில் இருப்பதில்லை. ஆனால், இப்படம் வெற்றியடையுமா என்று நினைக்கவில்லை. நல்ல விஷயங்களை இப்படம் மூலம் கூறியிருக்கிறோம் என்பதே திருப்தியளிக்கிறது.

புளுவேல் இன்று இல்லை, ஆனால் அதுபோன்று மோமோ, பப்ஜி போன்ற ஆபத்தான விளையாட்டுக்களை யாரும் விளையாடக்கூடாது என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகத் தான் இப்படத்தை எடுத்திருக்கிறோம். மேலும், இப்படத்தின் டீஸரை தமிழ் நாட்டில் உள்ள பல பள்ளிகளுக்கும் சென்று மாணவர்களுக்கு காட்சிப்படுத்தினோம். இதுவரை சுமார் 10000 மாணவர்களை சந்தித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியிருக்கிறோம். இது மாதிரி விளையாட்டை எத்தனை பேர் விளையாடுகிறார்கள் என்று மாணவர்களிடம் கேட்கும்போது அவர்களில் அதிக சதவீதம் விளையாடுவதாகக் கூறினார்கள். அந்த விளையாட்டை எதனால் விளையாடுகிறீர்கள் என்று கேட்டதற்கு குழந்தைகள் தனியாக இருக்கிறோம், பொழுதுபோக்கிற்காக விளையாடுகிறோம் என்று கூறினார்கள். அதில் ஒரு சிறுவன் என் சகோதரன் எனது பெற்றோருக்குத் தெரியாமல் புளூவேல் விளையாடுகிறான் அதிலிருந்து காப்பாற்ற ஏதாவது வழிகளை இப்படத்தில் கூறியிருக்கிறார்களா? என்று கேட்டான். அந்த கேள்வி என்னை சிந்திக்க வைத்தது, அடுத்த அரைமணி நேரத்தில் எங்கள் குழுவிடம் ஆலோசித்து அந்த மாணவனை மீட்டோம்.

மதுரையில் புளூவேல் விளையாட்டு மூலம் உயிரிழந்த இளைஞனின் தாயை விளம்பரத்திற்காக அழைத்து வரவில்லை. இரண்டு பிள்ளைகளையும் படிக்க வைக்க இயலாது என்ற நிலையில் அந்த தாய் இருக்கும்போது தன் படிப்பை 10வது வகுப்போடு நிறுத்திவிட்டு என்னைவிட எனது தம்பி நன்றாக படிப்பான் என்று கூறி வேலைக்குச் சென்று படிக்க வைத்தார். அந்த தம்பி பி.காம் படித்துக் கொண்டிருக்கும் வேளையில் இந்த விளையாட்டின் மூலம் உயிரை இழந்திருக்கிறான் என்றால் அவனின் சகோதரனுக்கும், தாய்க்கும் எந்தளவு பாதிப்பு இருந்திருக்கும். அவர்களுக்கு ஏற்பட்ட நிலைமை வேறு யாருக்கும் ஏற்பட்டுவிடக் கூடாது. மேலும், சிங்கப்பூரில் இருக்கும் எனது நிறுவனத்தில் அவருக்கு வேலை தருகிறேன்.

மேலும், இளைஞர்களுக்கு ஏற்படும் பல பிரச்னைகளுக்கு கவுன்சிலிங் கொடுத்து அவர்களைப் பாதிப்பிலிருந்து மீட்டு வருகிறோம். அப்படி ஒருமுறை மருத்துவர் ஃபஜிலா ஆசாத்தைத் தொடர்பு கொண்டபோது, இது மாதிரி சமூக வலைதளங்களில் பாதிக்கப்பட்டவர்களை 2 மணி நேரம் ஸ்கைப் பில் கொடுங்கள் நான் குணப்படுத்துகிறேன் என்றார். அதற்காக தான் அவரை இங்கு அழைத்து வந்தோம் என்றார்.

நிகழ்ச்சியின் இறுதியில் மனநல மருத்துவர் ஃபஜிலா ஆசாத் இசை தகட்டை வெளியிட்ட, இந்த விளையாடினால் உயிரிழந்த விக்னேஷின் தாயார் டெய்சிராணி பெற்றுக்கொண்டார்.

 

Related