அருவம் திரை விமர்சனம் (ரேட்டிங் 3.5/5)

நடிகர் சித்தார்த், கேத்தரின் தெரேசா நடிப்பில், இயக்குனர் சாய் ஷேகர் இயக்கத்தில் உணவு கலப்படத்தைப் பற்றிய ஒரு வெளிப்படையான படமாக இந்த படம் வெளி வந்துள்ளது. இந்த படத்தின் திரை விமர்சனத்தை இங்கே பார்க்கலாம்.

சித்தார்த், உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரியாக, மிகவும் நேர்மையானவராக நடந்து கொள்கிறார். இடைவேளைக்குப் பின்தான் அவர் வேலை சார்ந்த காட்சிகள் படத்தில் வருகின்றன. டீ, தண்ணீர், மருந்து, பால், பருப்பு ஆகியவற்றில் என்னென்ன மாதிரியான கலப்படங்கள் எப்படி எல்லாம் நடக்கின்றன என்பதைக் காட்டும் காட்சிகள் அதிர்ச்சிகரமானவை. சித்தார்த்தின் நேர்மையும், நடவடிக்கையும் அவருக்குப் பொருத்தமாக உள்ளன.

அரசு பள்ளியில் ஆசிரியராக இருக்கிறார் கேத்தரின் தெரேசா. வாசனையோ, நாற்றமோ அதை நுகரும் சக்தி அவருக்கு இல்லை. சமூக சேவையில் அக்கறையுடன் செயல்படுபவர். கேத்தரினைப் பார்த்த முதல் பார்வையிலேயே அவரைக் காதலிக்கிறார் சித்தார்த். உணவுப் பாதுகாப்புத் துறையில் அதிகாரியாக இருக்கிறார். முதலில் சித்தார்த்தின் காதலை மறுக்கும் கேத்தரின் பின்னர் அவர் மீது காதல் கொள்கிறார். ஒரு சந்தர்ப்பத்தில் பள்ளியில் சிறு விபத்தில் சிக்குகிறார் கேத்தரின். மருத்துவமனையில் இருக்கும் அவருக்கு நுகரும் சக்தி திடீரென வருகிறது. அதற்கடுத்து மத்திய அமைச்சர் ஒருவர், அவருடைய நண்பர் கொல்லப்படுகிறார்கள். அவர்களைக் கொன்றது கேத்தரின் என மத்திய அமைச்சரின் தம்பி கண்டுபிடித்து கேத்தரினைக் கொல்லத் துடிக்கிறார். அதன்பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் கதை.

காதல் கதையாக ஆரம்பித்து, சமூகக் கதையாக மாறி, பேய்க் கதையாக டிவிஸ்ட் அடித்து பழி வாங்கும் கதையாக முடிவுக்கு வந்து இரண்டாவது பாகத்திற்கும் ஆரம்பம் போட்டு முடிகிறது படம். ஒரு நல்ல ஆக்ஷன் படத்துக்குரிய கதையை பேய்ப் படமாக மாற்றியதால் அதன் சுவாரசியம் குறைந்துவிட்டது என்றே சொல்ல வேண்டும்.  த்தரின் முகபாவத்திற்கும் அவருடைய பின்னணி குரலுக்கும் பொருத்தமில்லாமல் தெரிகிறது. முடிந்தவரை தன் கதாபாத்திரத்தில் நடிக்க முயற்சித்திருக்கிறார் கேத்தரின்.

மெயின் வில்லனாக கபீர் சிங். பல படங்களில் பார்த்த அதே மாதிரியான வில்லன். மகளிடம் தோழமையாகப் பழகும் அப்பாவாக ஆடுகளம் நரேன். நாயகன் சித்தார்த்தின் நண்பராக சதீஷ் சில காட்சிகளில் நடித்துள்ளனர். படத்திற்கு தமன் இசை அமைந்துள்ளார். அவரது பின்னணி ஒகே தான். படத்தில் இரண்டே பாடல்கள் மட்டும் உள்ளன. ஒரு முழுமையான டூயட் பாடலையாவது வைத்திருக்கலாம் என்று ரசிகர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

படத்தின் பிளஸ்: சித்தார்த்தின் நடிப்பு

படத்தின் மைன்ஸ்: அடுத்து என்ன நடக்கும் என யூகிக்க முடிந்த திரைக்கதை

மொத்தத்தில், சமூக அக்கறையுடன் ஒரு திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார்கள். இயற்கையாக விளையும் பழங்கள், பால், மற்ற உணவுப் பொருட்கள் என அனைத்திலும் கலப்படம் இருக்கத்தான் செய்கிறது. அவற்றைக் கண்டுபிடித்து தவறு செய்பவர்களுக்கு தண்டனை தரவும், அவற்றைத் தடுக்கவும் அரசாங்கத்திலேயே சில துறைகள் உள்ளன. அவர்கள் உண்மையிலேயே சரியாக செயல்படுகிறார்களா என்பதை காட்டும் படமாக இருப்பாதால், கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்.