விஜயகாந்த் ஒரு திரைப்பட நடிகரும், தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் என்னும் அரசியல் கட்சியின் தலைவரும் ஆவார். 2011 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை தமிழ்நாடு சட்ட மன்ற உறுப்பினராகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்தார்.

விஜயகாந்த் என்னும் விஜயராஜ், விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டைக்கு அருகில் உள்ள இராமானுசபுரம் என்னும் சிற்றூரில் பிறந்தவர். சிறுவயதிலேயே அவரது குடும்பம் மதுரைக்கு இடம்பெயர்ந்தது. இதனால், விஜயகாந்த் மதுரையில் வளர்ந்தார். சிறுவயதிலேயே சினிமா மீது கொண்ட மோகத்தால், படிப்பில் ஆர்வம் காட்டவில்லை. தன் தந்தையின் மேற்பார்வையில் இயங்கிய அரிசி ஆலையில் விஜயகாந்த் தனது பதின்ம வயதில் சிறுசிறு பணிகளைச் செய்துவந்தார்.

இயக்குநர் காஜா ‘விஜயராஜ்’ என்னும் பெயரை விஜயகாந்த் என மாற்றி வைத்தார்.[1] திரைப்படத்தில் நடிக்கும் நோக்கத்தோடு சென்னைக்கு வந்தார். தொடர் முயற்சிக்குப் பின்னர் 1978 ஆம் ஆண்டிலிருந்து தமிழ்த் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கிய இவர், தமிழ்நாட்டின் முன்னணி நடிகர்களுள் ஒருவராக இருந்தார்.இவர் இதுவரை 156 படங்களில் நடித்திருக்கிறார்.[சான்று தேவை] 1991 ஆம் ஆண்டில் விஜயகாந்த் நடித்த கேப்டன் பிரபாகரன் என்னும் படம் நூறாவது படமாக வெளிவந்து வெற்றியை ஈட்டித் தந்தது. இந்தப் படம்தான் இவருக்கு கேப்டன் என்னும் அடை மொழியைத் தந்தது.

விஜயகாந்த், 1990 ஆம் ஆண்டில் பிரேமலதா என்னும் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார்.

அதன் தொடர்ச்சியாக 1993 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் இவரது ரசிகர் மன்றத்தினர் சுயேச்சையாகப் போட்டியிட்டனர். அவர்களில் பலர் வெற்றிபெற்றனர். இப்பின்புலத்தில் விஜயகாந்த் தானும் அரசியலில் ஈடுபடும் எண்ணங்கொண்டார். அதனை அவ்வப்பொழுது வெளியிட்டும் வந்தார்

2005ம் ஆண்டு தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் என்ற பெயரில் புதிய அரசியல் கட்சி ஒன்றைத் தொடங்கினார்.[4] இவர் கட்சியின் நிறுவனத் தலைவராகப் பொறுப்பேற்றார். இரசிகர் மன்றத்தின் மாநிலத் தலைவராக இருந்த ராமு வசந்தன், கட்சியின் பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்றார்.

2006ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநில சட்டமன்றத் தேர்தலில் விருத்தாச்சலம் தொகுதியிலிருந்து வெற்றி பெற்று தமிழக சட்டபேரவை உறுப்பினராக பணியாற்றி்னார். இத்தேர்தலில் மற்ற தொகுதிகளில் போட்டியிட்ட இக்கட்சியைச் சேர்ந்த மற்ற வேட்பாளர்கள் தோல்வி அடைந்தனர்.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011 இரிஷிவந்தியம் தொகுதியிலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இத்தேர்தலில் அவரது கட்சிக்கு எதிர்க்கட்சித் தகுதி கிடைத்தது. 2011 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை தமிழ்நாடு சட்ட மன்ற உறுப்பினராகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்தார்.

Related