சாண்டோ சின்னப்பா தேவர் என அழைக்கப்படும் எம். எம். ஏ. சின்னப்பா தேவர் 1960- 1970 களில் புகழ்பெற்ற தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளரும் நடிகரும் ஆவார். பட அதிபராக உயர்ந்தவர் எம்.எம்.ஏ. சின்னப்பா தேவர். எம்.ஜி.ஆரை நடிப்பில், குறுகிய காலத்தில் பல வெற்றிப் படங்களை தயாரித்தவர். தனது படங்களில் விலங்குகளை நடிக்க வைத்தவர். எம். ஜி. ராமச்சந்திரன் இவருடைய 17 படங்களில் கதாநாயகராக நடித்தார். தேவர் பிலிம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி பல வெற்றிப்படங்களைத் தந்தவர்; மொழி தெரியாத போதும் இந்தித் திரையுலகில் பிரபல நடிகர் ராஜேஷ் கன்னா நடிப்பில் ’’ஹாத்தி மேரே சாத்தி’’ என்ற வெற்றிப்படத்தை 1971-ல் வழங்கினார். 1970 – 1971இல் கலைமாமணி விருது பெற்றவர்.

ஜெமினி எஸ்.எஸ்.வாசன், ஏவி. மெய்யப்ப செட்டியார், விஜயா வாகினி நாகிரெட்டியார், மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர்.சுந்தரம், பட்சி ராஜா ஸ்டூடியோ அதிபர் ஸ்ரீராமுலு நாயுடு ஆகியோர் கொடி கட்டிப் பறந்த காலத்தில், இதே கருதுகோள்களோடு தமிழ்த் திரையுலகில் தடம் பதித்தவர்; அவர்களுக்கு இணையாக பல வெற்றிப் படங்களைத் தயாரித்து, திரை உலகை வியக்க வைத்தவர் எம் எம் ஏ சின்னப்பா தேவர்.

சின்னப்பா தேவர் கோவையை அடுத்த ராமநாதபுரத்தில் 1915 ஜூன் 28 ஆம் தேதி பிறந்தார். பெற்றோர் அய்யாவுத்தேவர்- ராமாக்காள். சின்னப்பா தேவருக்கு ஒரு அண்ணன். பெயர் `பயில்வான்’ சுப்பையா தேவர். நடராஜதேவர், ஆறுமுகம், மாரியப்பன் என்று மூன்று தம்பிகள். மருதமலை மருதால மூர்த்தி அய்யாவு சின்னப்பா தேவர் என்பதன் சுருக்கமே எம். எம். ஏ சின்னப்பா தேவர் ஆகும். இதில் மருதமலை மருதால மூர்த்தி என்பது மருதமலை முருகனின் பெயராகும்.

இவர்களில் ஆறுமுகம்தான் பிற்காலத்தில் திரைப்படத்துறையில் எடிட்டராகி, எம்.ஏ.திருமுகம் என்ற பெயரில் இயக்குநராக விளங்கினார். குடும்பத்தின் பொருளாதார நிலை காரணமாக சின்னப்பா தேவர் ஐந்தாவது வகுப்பு வரைதான் படித்தார். பின்னர்,கோவை பங்கஜா மில்லில் மாதம் ஒன்பது ரூபாய் சம்பளத்தில் சம்மட்டியால் இரும்பு அடிக்கும் வேலையில் வாழ்க்கையைத் தொடங்கினார். அக்காலத்தில் கோவையில் புகழ்பெற்று விளங்கிய நிறுவனமாக “ஸ்டேன்ஸ் மோட்டார் கம்பெனி”யில் தொழிலாளியாகப் பணியில் சேர்ந்தார்.

அதன் பின் பால் வியாபாரம், அரிசி வியாபாரம் ஆகியவற்றில் ஈடுபட்டார். சோடா தயாரித்து விற்பனை செய்தார். சின்னப்பா தேவரும் அவர் நண்பர்களும் சேர்ந்து, “வீரமாருதி தேகப் பயிற்சி சாலை” என்ற உடற்பயிற்சி நிலையத்தைத் தொடங்கினார்கள்.

சின்னப்பா தேவருக்கு 1936-ல் அவருடைய 21-வது வயதில் திருமணம் நடந்தது.இவர் மனைவியின் பெயர் மாரிமுத்தம்மாள். இவ்விணையருக்குத் தண்டாயுதபாணி என்ற ஒரு மகன், சுப்புலட்சுமி, ஜெகதீசுவரி என்று இரண்டு மகள்கள். தண்டாயுதபாணி ‘பி.காம்’ பட்டதாரி. தேவர் தயாரித்த பெரும்பாலான படங்களைத் தேவரின் தம்பியும், புகழ் பெற்ற எடிட்டருமான ஆறுமுகம் என்கிற எம். ஏ. திருமுகம் இயக்கினார். தேவர் பிலிம்ஸ் நிர்வாகத்தை மற்றொரு தம்பியான மாரியப்பன் கவனித்துக்கொண்டார்.

தேவரின் மூத்த மகள் சுப்புலட்சுமியை மணந்தவர் ஆர். தியாகராஜன். இவரும் பிறகு இயக்குநர் ஆனார். ‘வெள்ளிக்கிழமை விரதம்’, ‘ஆட்டுக்கார அலமேலு’ ஆகியவை இவர் இயக்கியப் படங்கள் ஆகும்.

சின்னப்பா அங்கு உடற்பயிற்சிகள் செய்து கட்டுடல் பெற்றார் மல்யுத்தம், கத்திச்சண்டை, கம்புச்சண்டை முதலியவற்றையும் கற்றார். இந்த காலத்தில் கோவையில் ’’ஜுபிடர் பிக்சர்ஸ்’’ என்ற நிறுவனம் திரைப்படங்களைத் தயாரித்து வந்தது. அந்நிறுவனத்தில் எம்.ஜி.ஆர், எம். என். நம்பியார், எஸ். வி. சுப்பையா ஆகியோர் ஒப்பந்த நடிகர்களாக மாத ஊதியத்தில் வேலை பார்த்து வந்தனர். திரைப்படங்களில் சண்டைக் காட்சிகளில் நடிக்கவும், புராண கதாபாத்திரங்களில் நடிக்கவும் கட்டுடல் பெற்ற நடிகர்கள் தேவைப்பட்டனர். அப்போது, சின்னப்பா தேவருக்கு அந்த வேடங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. சின்ஹா என்னும் இயக்குநரின் பார்வையில் பட்டுத் துணை நடிகரானார். 20 படங்கள் வரை பல வேடங்களில் நடித்தார்.

அக்காலத்தில், புராணப் படங்கள் தயாரிப்பதில் புகழ் பெற்ற சி.வி.ராமன் என்ற இயக்குநர் கோவையில் இருந்தார். அவரிடம் தயாரிப்பு நிர்வாகியாகத் தேவர் பணியாற்றினார். சினிமாத் தயாரிப்பு நுட்பங்களைக் கற்றுக்கொண்டார். இதற்கிடையில், தேவரின் தம்பி திருமுகம் எடிட்டிங் துறையில் பெயர் பெற்றார். ஜுபிடர் தயாரித்த “வேலைக்காரி”, “மனோகரா” முதலிய படங்களுக்கு எடிட்டராகப் பணியாற்றினார்.

சொந்தமாகத் திரைப்படம் எடுக்க வேண்டும் என்று தேவருக்கு ஆசையில் நண்பர்களிடம் பணம் சேகரித்து 10 ஆயிரம் ரூபாயுடன் சென்னைக்கு வந்தார். ஜீலை 7, 1955 “தேவர் பிலிம்ஸ்” படக்கம் பெனியை தொடங்கினார். முதல் படத்தையே, பெரிய நட்சத்திரங்களை வைத்து தயாரிக்க வேண்டும் என்று தேவர் விரும்பினார். கோவையில் நண்பராகப் பழகியிருந்த எம்.ஜி.ஆரை அணுகி, தன் படத்தில் நடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். எம்.ஜி.ஆர். சம்மதித்தார். அதன் பின்னர் பானுமதி மற்றும் பாலையா, கண்ணாம்பா, ஈ.ஆர்.சகாதேவன் ஆகியோரும் ஒப்பந்தம் செய்யப்பட்டனர்.

1977-இல் முதலமைச்சர் ஆனபின், எம்.ஜி. ஆர் படங்களில் நடிக்கவில்லை. எனவே, நடிகர் ரஜினிகாந்த்தை வைத்து ‘தாய் மீது சத்தியம்’ படம் தயாரிக்க தேவர் முடிவு செய்தார். வசனங்களை தூயவன் எழுதினார். ரஜினிகாந்த்தின் ஜோடியாக ஸ்ரீபிரியா நடித்தார்.சங்கர் கணேஷின் இசையில் தேவரின் மருமகன் ஆர்.தியாகராஜன் இப்படத்தை இயக்கினார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஊட்டியில் நடந்தது. 6-9-1978-ல் தேவர் ஊட்டி சென்று படபிடிப்புகளில் கலந்துகொண்ட போது தேவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. மருத்துவர்கள் வந்து சிகிச்சை அளித்தனர். ரத்த அழுத்தமும் அதிகமாக இருந்தது. ஊட்டியில் கடும் குளிர் இருந்ததால், கோவைக்கு சென்று சிகிச்சை பெறுவது நல்லது என்று கருதப்பட்டது. எனவே, தேவர் கோவைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சைகள் தொடர்ந்தன. மறுநாள் 7-9-1978 இல் மீண்டும் மாரடைப்பு ஏற்பட்டது. சிகிச்சை அளித்தும் பலன் இன்றி, காலை 10 மணி அளவில் மரணமடைந்தார். அப்போது அவருக்கு வயது 63.

Related